Tuesday, 19 August 2025

புரட்சி தலைவர் சர்தார் பாலபாரதி செல்லதுரை தேவர்

------------------------------------------- ✊ சுதந்திரப் போராட்ட வீரர் புரட்சி தலைவர் சர்தார் பாலபாரதி செல்லதுரை தேவர் – திருவாடானைச் சிறை உடைப்பின் மாவீரன் ------------------------------------------ பிறப்பு மற்றும் ஆரம்பம் பிறப்பு: 23 செப்டம்பர் 1908 பிறந்த ஊர் : அன்றைய மதராஸ் மாகாணம் ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டம், முப்பையூர் அருகிலுள்ள விளாங்காட்டூர் கிராமம். விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவர், சிறுவயதிலிருந்தே நாட்டுப்பற்றும் தன்னலமற்ற போராட்ட மனப்பான்மையும் கொண்டவராக விளங்கினார். ------------------------------------------- வரலாற்றுப் பின்னணி – 1942 1942 ஆகஸ்ட் 8 அன்று காந்திஜி வழங்கிய “வெள்ளையனே வெளியேறு” (Quit India) தீர்மானம், இந்தியா முழுவதும் அதிர்வை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களிலும் மாணவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் சுதந்திரத்திற்காக சாலைகளில் இறங்கினர். தேவகோட்டை–திருவாடானை பிரதேசங்களும் அதே போராட்டத் தீயில் எரிந்தன. ------------------------------------------- திருவாடானைச் சிறை உடைப்பு – 1942 ஆகஸ்ட் 9, 1942 நள்ளிரவு: தேவகோட்டையில் கைது செய்யப்பட்ட சின்ன அண்ணாமலை, 22 மைல் தூரத்தில் உள்ள திருவாடானை சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டார். கைது செய்த செய்தி பரவியதும் தேவகோட்டை நகரம் கலகத்துடன் பொங்கி எழுந்தது; பேருந்துகள் எரிக்கப்பட்டன; அலுவலகங்கள் தாக்கப்பட்டன; பின்னர் ஆயிரக்கணக்கான மக்கள் திருவாடானை நோக்கிச் சென்றனர். 20,000க்கும் மேற்பட்டோர் சிறை முன் திரண்டனர். செல்லதுரை தேவரின் தலைமை அந்த மகா கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் புரட்சி தலைவர் சர்தார் பாலபாரதி செல்லதுரை தேவர். அவர் மக்களை ஒழுங்குபடுத்தி சிறை முன் அமரவைத்தார். சிறை காவலர்கள், பெரும் மக்கள் கூட்டத்தை கண்டு அச்சமடைந்து சாவியை ஒப்படைக்க முன்வந்தனர். ஆனால் செல்லதுரை தேவர் உறுதியுடன், “இது சாதாரண விடுதலை அல்ல; மக்களின் சக்தியால் நடத்தப்படும் வரலாற்றுப் புரட்சி. சாவியை ஏற்காமல் நாமே கதவை உடைக்க வேண்டும்” என்றார். இதையே சின்ன அண்ணாமலையிடம் தெரிவித்து, அவரது ஒப்புதலுக்குப் பின் மக்கள் கதவை உடைத்தனர். அந்த பட்டப்பகல் சிறை உடைப்பு இந்திய சுதந்திர வரலாற்றில் முதல் மக்கள் நடத்தும் சிறை உடைப்பு எனப் பொற்குறியீடாகப் பதிந்தது. ------------------------------------------- துப்பாக்கிச் சூடு மற்றும் பலி கைதிகள் விடுதலை செய்யப்பட்டவுடன் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். சின்ன அண்ணாமலை இடது கையில் குண்டு தாக்கம் அடைந்தார்; செல்லதுரை தேவர் மக்களுடன் துணிந்து நின்றார். சுமார் 50 பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர். இந்தக் குருதி பலியோடு சுதந்திரத் தீ இன்னும் வலுப்பெற்றது. ------------------------------------------- கைது, தலைமறைவு மற்றும் சிறைவாசம் சம்பவத்திற்குப் பின் செல்லதுரை தேவர் மற்றும் பிற போராளிகள் மீது வழக்குகள் தொடரப்பட்டன. பின்னர் சில ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் சதி திட்டங்களை தீட்டி அதை செயல்படுத்தினார. காவல் துறையின் கண்காணிப்பை மீறி, மக்கள் மத்தியில் விடுதலை உணர்வை பரப்பத் தொடர்ந்து செயல்பட்டார். ------------------------------------------- விடுதலைக்குப் பின் அரசியல் பணி 1947-இல் சுதந்திரம் கிடைத்த பின், செல்லதுரை தேவர் மக்கள் மத்தியில் மீண்டும் வெளிப்பட்டார். 1952 இல் நடைபெற்ற முதலாவது பொதுத் தேர்தலில், திருவாடானைத் தொகுதியின் முதல் சட்டமன்ற உறுப்பினராக மக்களால் சுயேச்சையாக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம், மக்களின் நம்பிக்கையையும் அன்பையும் பெற்ற போராளி, அரசியலிலும் தன் பாதையைப் பதித்தார். ------------------------------------------ மறைவு 06 நவம்பர் 1975 அன்று செல்லதுரை தேவர் மறைந்தார். அவர் வாழ்ந்த பாதை, சுதந்திரப் போராட்ட வரலாற்றிலும் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றிலும் அழியாத தடம் பதித்தது. ------------------------------------------- உரிய அங்கீகாரம் இல்லாமை – ஒரு வருத்தம் பெரும் புரட்சி நிகழ்வை வழிநடத்திய சர்தார் பாலபாரதி செல்லதுரை தேவர் போன்ற மாவீரனுக்கு இன்று வரை உரிய அங்கீகாரம் வழங்கப்படாதது வருத்தம் தருகிறது. சுதந்திரத்திற்கு பின் வந்த சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த மன்னிர்காணவர்களாய் இல்லாததால், திருவாடானை பேருந்து நிலையத்திற்கு கூட அவர் பெயரை வைக்க முடியவில்லை. ஒரு மணிமண்டபமோ, சிலையோ, அல்லது அவரது பெயரில் அரசு கல்லூரியோ கூட இல்லை என்பது சமூகத்தின் மறப்பை வெளிப்படுத்துகிறது. ------------------------------------------ நிறைவுரை புரட்சி தலைவர் சர்தார் பாலபாரதி செல்லதுரை தேவர் – சுதந்திரப் போராட்ட வீரர், மக்களின் தலைவன், அரசியல் முன்னோடி. 1942 இல் நடந்த திருவாடானைச் சிறை உடைப்பு அவரது பெயரை இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் அழியாத அடையாளமாகப் பதித்துள்ளது. அவர் மக்கள் மத்தியில் உருவாக்கிய வீர உணர்வு இன்னும் தலைமுறைகளைத் தூண்டுகிறது. இன்னும் அவர் நினைவாக உரிய அங்கீகாரம், நினைவுச் சின்னம், கல்வி நிறுவனம் ஒன்று உருவாகுவது தான் நம் சமூகத்தின் கடமை.

No comments:

Post a Comment