மாவீரர் சசிவர்ணத் தேவரால் உருவாக்கப்பட்ட சிவகங்கைச் சீமை, இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் வீரத்திற்கும் தியாகத்திற்கும் ஒரு அடையாளமாகும். அவருக்குப் பிறகு, இச்சீமையின் அடுத்த மன்னராகப் பொறுப்பேற்ற முத்துவடுகநாத தேவர், ஆங்கிலேயப் பேரரசை எதிர்த்துப் போர்க்களத்திலேயே வீரமரணமடைந்த பெருமைக்குரியவர்.
1772-ஆம் ஆண்டு காளையார் கோவில் போரில் முத்து வடுகநாத தேவர் வீரமரணமடைந்த பிறகு, அவரது மனைவி வீரமங்கை வேலுநாச்சியார் எட்டு ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டார். பின்னர், தனது கணவரைக் கொன்ற ஆங்கிலேய அதிகாரியைத் தனது வாள் நுனியால் வீழ்த்திப் பழிதீர்த்தார். 1780-இல் சிவகங்கைச் சீமையை மீட்டெடுத்தார். இந்தியத் துணைக் கண்டத்திலேயே ஆங்கிலேயரிடம் இழந்த தனது நாட்டை மீண்டும் மீட்ட ஒரே ராணி வேலுநாச்சியார் மட்டுமே ஆவார். மீட்கப்பட்ட சிவகங்கைச் சீமையை முறையாக ஆட்சி செய்த அவர், தனது மகள் வெள்ளச்சி நாச்சியாரை இளவரசியாக முடிசூட்டினார். வீரமங்கை வேலுநாச்சியார் தனது வாழ்நாள் போராட்டங்களுக்குப் பிறகு 1796 டிசம்பர் 25 அன்று இயற்கை எய்தினார்.
முத்துவடுகநாதத் தேவர் பிறந்த அதே வீர மண்ணில், சக்கந்தி ஊரில் பிறந்தவர் வேங்கை வேங்கன் பெரிய உடையண தேவர். இளவரசி வெள்ளச்சி நாச்சியாரை இவருக்குத் திருமணம் செய்து வைத்த வேலுநாச்சியார், வேங்கன் பெரிய உடையண தேவரைச் சிவகங்கையின் அடுத்த மன்னராக முடிசூட்டினார்.
மன்னர் வேங்கன் பெரிய உடையண தேவருக்கும் வெள்ளச்சி நாச்சியாருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்தப் பிஞ்சு குழந்தை தனது மூன்று வயதிலேயே இறந்து போனது. இத்துயர சம்பவத்தைத் தொடர்ந்து சில காலங்களிலேயே வெள்ளச்சி நாச்சியாரும் மறைந்தார்.
தன்னுடைய முன்னோர்களான சசிவர்ணத் தேவர் மற்றும் முத்து வடுகநாதத் தேவர் காட்டிய வழியில், ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை வேங்கன் பெரிய உடையண தேவர் கடுமையாக எதிர்த்தார். அந்நியர்களுக்குத் திறை செலுத்த மறுத்து, சிவகங்கைச் சீமையின் சுதந்திரத்திற்காகப் போராடினார். காளையார் கோவில் போருக்குப் பிறகு, 1801 ஆம் ஆண்டு அக்டோபர் 4 அன்று சோழபுரம் அருகே உள்ள காடுகளில் ஆங்கிலேயப் படைகளால் இவர் கைது செய்யப்பட்டார்.
ஆங்கிலேய அரசு இவரைப் பயங்கரமான புரட்சியாளராகக் கருதியதால், 1802 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 அன்று தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 'அட்மிரல் நெல்சன்' என்ற கப்பல் மூலம் பினாங்கு (மலேசியா) நாட்டிற்கு நாடு கடத்தியது. இந்திய வரலாற்றிலேயே அந்நிய மண்ணுக்கு நாடு கடத்தப்பட்ட முதல் இந்திய மன்னர் இவரே ஆவார். இறுதியில் 1802 செப்டம்பர் 19 அன்று, சுமத்ரா தீவின் பென்குலென் சிறையில் சிவகங்கைச் சீமையின் மானம் காக்கத் தன் வாழ்வைத் தியாகம் செய்து வீரமரணமடைந்தார்.
No comments:
Post a Comment