சிங்கம்பட்டியின் வரலாறு :
கி.பி. 1100-ம் ஆண்டு சிங்கம்பட்டி ஜமீன் உதயம் ஆனது. சிற்றரசேயாயினும் தமிழ் வித்வான்கள், கவிஞர்களையும் போற்றிப் பரந்த பெருமை கொண்ட ஜமீன். ராமநாதபுரம் மாவட்டத்தில் திருஉத்திரகோசமங்கையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் கலைகள் செழித்தோங்கிய காலம் அது.
மதுரை நகரில் அப்போது பாண்டியர் மன்னராட்சி புரிந்தனர். அரசக் குடும்பத்தில் சிற்றப்பனுக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட பூசலால் மகன் குலசேகரபாண்டியன் சோழ மன்னனிடம் தஞ்சம் புகுந்தான். பாண்டியர் வம்சத்தில் வந்த சிற்றப்பன் ஈழ நாட்டரசனிடம் அபயம் புகுந்தான். இலங்கேசன் உதவியால் பராக்கிரம பாண்டியன் ஈழவேந்தன் படை துணையுடன் ராமநாதபுரம் ராஜ்யத்தின் மீது
படையெடுத்து ஆக்கிரமித்தான்.
இந்த பேராபத்தை உணர்ந்த குலசேகரபாண்டியன் சோழர் படை உதவியுடன் எதிர்த்துப் போரிட்டு, எதிரிகளை அனுராதபுரம் வரை புறமுதுகு காட்டி ஓட விரட்டியடித்தான். இவ்வாறு ஏற்பட்ட அரசியல் குரோதத்தால் வரலாற்றில் மாறுதல் ஏற்பட்டது. பாண்டியன் ஆட்சியின் கீழ் இருந்த சேதுபதிகளின் ஆதிக்கம் வீழ்ச்சியடைந்தது. சோழ மன்னன் வம்சம் ஆளத் தலைப்பட்டது.
இக்காலக்கட்டத்தில் பெருநில பிரபு ஆபதோதாரணத் தேவர் தன்னைப் பின் தொடர்ந்த பிரஜைகளோடு வெளியேறினார்.
அவர்கள் கடலோர நெடுஞ்சாலை வழியாக கன்னியா குமரி வந்தடைந்தனர். மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பரப்பில் இங்கும் அங்குமாக குடியேறத் தொடங்கினர். இக்காலத்தில் அந்த மறவர் குலத்தைச் சேர்ந்தவர்கள் கன்னியாகுமரி முதல் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் ஜமீன் நிலப்பாகம் வரை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தின் நிலப்பரப்பை ஆண்டு வந்துள்ளனர். ஆபதோதாரணத் தேவர் கடைசியாக சேரன்மகாதேவி அருகேயுள்ள தேவநல்லூர் கிராமத்தில் சகாக்களுடன் குடியேறினார்.
ஆபதோதாரணத் தேவர் குடும்பத்தில் ஏற்பட்ட பிணக்கு காரணமாக அவரது பேத்தி அல்லது கொள்ளுபேத்தி தேவநல்லூரை விட்டு வெளியேறி சிங்கம்பட்டி வந்தார். அப்போது சிங்கம்பட்டி வல்லையர் இனத்தாரால் ஆளப்பட்டு வந்தது. அப்போதிருந்த வல்லையர் மன்னன் அவளது துயரச் செய்தி கேட்டு தன் குடும்பத்தில் தங்கும்படி கேட்டுக் கொண்டார். இதற்கிடையே அவள் ஆண்மகனை பெற்றெடுத்தாள். வல்லைய மன்னனுக்கு ஆண் வாரிசு இல்லாததால் அவர் இறக்கும் தறுவாயில் தான் வளர்த்து வந்த அந்த இளைஞனையே தனது அரியணைக்கு வாரிசாக நியமனம் செய்தார். அந்த இளைஞன்தான் பிரீதிபாலு.
பிரீதிபாலு ஆபதோதாரணத்தேவரின் 5-வது தலைமுறை. இதனால், வல்லையர் தலைவனின் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டது. அரசரின் உறவினர்கள் பிரீதிபாலுவை எதிர்த்தனர். அன்னியர் ஒருவன் அரியணை ஏறுவதைத் தடுத்தனர். இதனால், பிரீதிபாலு வெளியேறி தேவநல்லூரில் தன் தந்தை பரம்பரையை தழுவினான். அவர்கள் உதவியுடன் சிங்கம்பட்டி மீது படையெடுத்த பிரீதிபாலு அரியணை ஏறி ஆட்சியைக் கைப்பற்றினார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உக்கிரன்கோட்டையை தலைநகராகக் கொண்ட பாண்டிய ராஜ்யத்தின் தென் பகுதியை கலிதப்பாண்டியன் ஆண்டு வந்தார். அந்த சமயம் தன் மீது படை எடுத்த கன்னட ராஜ்ய அரசன் மீது தாக்குதல் நடத்த கலிதப்பாண்டியன் பிரீதிபாலுக்கு கட்டளையிட்டான். கன்னட ராஜ்ய சர்தாரை தோற்கடித்து வெற்றிவாகை சூடிய பிரீதிபாலுக்கு கலிதப்பாண்டியன் சில நிலபாகங்களையும், ஆஸ்திகளையும் வழங்கினான். தான் சந்தித்த இடையூறுகளை முறியடித்து வல்லையர் தலைவனின் சிம்மாசனம் ஏறினார் பிரீதிபாலு.
காலப்போக்கில் விஜயநகர சாம்ராஜ்யம் நலிவடைந்த பின் அங்கிருந்து மதுரைக்கு வைஸ்ராயாக வந்த நாகமநாயக்கரும், அவரது புதல்வர் விஸ்வநாத நாயக்கரும் தாங்கள்தான் மதுரைக்கும், திருநெல்வேலிக்கும் எதிரி இல்லா சுதந்திரம் பெற்ற ஆட்சித் தலைவர்கள் பறைசாற்றினர். ஆற்றல்மிக்க அவர்கள், பிதாமகரான அரியநாயக முதலியார் தலைமையில் முன்பிருந்த பாண்டிய மன்னர் கீழ் இருந்த குறுநில ஆட்சிப் பரப்புகளை பிரிவினை செய்து 72 பாளையங்களாக மாற்றி அமைத்தனர். அப்போது பிறந்த பாளையம்தான் சிங்கம்பட்டி.
விஸ்வநாதநாயக்கர் மதுரையைச் சுற்றி ஒரு பிரமாண்டமான கோட்டையை நிர்மாணித்தார். அதில் 72 கொத்தளங்கள் அமைக்கப்பட்டன. அவற்றுள் 21 கொத்தளங்கள் சிங்கம்பட்டி பாளையக்காரர் தலைமையின் கீழ் வைக்கப்பட்டன. சிங்கம்பட்டி பாளையக்காரரின் இணையற்ற தீரபராக்கிரமத்தை கண்ட விஸ்வநாதநாயக்கர் அவரை தென்நாட்டுப்புலி என பாராட்டினார். பின்பு 1802-ம் ஆண்டு சென்னை ராஜ்ய கவர்னர் ராபர்ட் கிளைவ், பாளையங்கள் அனைத்தையும் ஜமீன்களாக மாற்றி அமைத்தார்.
வனப்பிரதேசத்தில் உள்ள பாணத்தீர்த்த அருவிக்கு சிங்கம்பட்டி சமஸ்தான குலகுரு சிருங்கேரி சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ நரசிம்ம பாரதி தீர்த்தமாட வந்திருந்தபோது, தீர்த்தபதி என்னும் பட்டத்தை சிங்கம்பட்டி குறுநில மன்னருக்கு வழங்கினார்.
சிங்கம்பட்டி ஜமீன்தார் திவான்பகதூர் தென்னாட்டுப்புலி நல்லக்குத்தி சிவசுப்பிரமணிய தீர்த்தபதி 29-வது தலைமுறையில் தோன்றியவர். தயாளகுணம் கொண்ட இவர் அம்பாசமுத்திரத்தில் அரசு பொது மருத்துவமனை, அரசுப் பள்ளி கட்டுவதற்கு நிலம் கொடுத்ததால், இவ்விரண்டும் தீர்த்தபதி என அவரது பெயரால் தற்போதும் அழைக்கப்பட்டு வருகிறது.
சிங்கம்பட்டி ஜமீன்தார் 30-வது பட்டமான சங்கர சிவசுப்பிரமணிய தீர்த்தபதி சென்னை கல்லூரியில் படித்து வரும்போது ஒரு கொலைக் குற்றவாளியாக சட்டத்தின் பிடியில் சிக்கினார். இந்த வழக்கில் பெரும் விரயம் ஏற்பட்டது. அது ஜமீன் வருமானங்களைப் பாதித்தது. கொண்ட கடனை சரி செய்ய அவரின் பிதா, மலை நாட்டில் உள்ள 8,000 ஏக்கர் நிலத்தை பிரிட்டிஷார் நடத்தி வந்த கம்பெனிக்கு தேயிலை பயிரிட குத்தகைக்குக் கொடுத்தார். இவ்வாறுதான் மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் உருவானது.
சிங்கம்பட்டியின் 31-வது பட்டம் பெற்றவர் டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி. இவர்தான் சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் கடைசி ஜமீன்தார். இவருக்கு மூன்றரை வயதில் முடி சூட்டப்பட்டது. இவருக்கு இப்போது வயது 80. முருகதாஸ் தீர்த்தபதிக்கு மகன்கள் மகேஸ்வரன், சங்கராத் பஜன், மகள்கள் அபராஜிதா, சுபத்ரா, மௌலிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.
1952-ம் ஆண்டு ஜமீன் ஒழிப்பு சட்டம் வரும் வரை மேற்குத் தொடர்ச்சி மலையில் 74,000 ஏக்கர் நிலங்கள் ஜமீன் ஆளுகையில் இருந்து வந்தது. மேலும், சிங்கம்பட்டி ஜமீன் ஆளுகையில் காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில், அகமகாதேவர் கோயில், முத்தாரம்மன் கோயில், வல்லப கணபதி கோயில், வெயில் உகந்த அம்மன் கோயில், முப்புடாதி அம்மன் கோயில், சுப்பிரமணியசாமி கோயில், ஊத்துக்குளி சாஸ்தா ஆகிய 8 கோயில்கள் உள்ளன.
இக்கோயில்களுக்கு முருகதாஸ் தீர்த்தபதி பரம்பரை அறங்காவலராக இருந்து நிர்வகித்து வருகிறார்.
காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவில் ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி பக்தர்களுக்கு ராஜ உடையில் காட்சியளிப்பார். தொடர்ந்து 74 வருடங்களாக சொரிமுத்து அய்யனார் கோயிலில் இவர் ராஜஉடையில் காட்சி அளித்துள்ளார்.
சிங்கம்பட்டி ஜமீன், பிரிட்டிஷ் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 8 ஆயிரம் கிஸ்தி செலுத்தி வந்துள்ளனர்.
ஜமீன்சிங்கம்பட்டியில் சிங்கம்பட்டி அரண்மனை 5 ஏக்கரில் அமையப்பெற்றுள்ளது. சிங்கம்பட்டி ஜமீனில் 1,000 குதிரைகளை வைத்துப் பராமரித்து வந்துள்ளனர். 5 தந்தப் பல்லக்குகள் இருந்தன. ஜமீன்சிங்கம்பட்டி அரண்மனையில் கிங் ஜார்ஜ் தொடக்கப் பள்ளி இப்போதும் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி. தற்போது விவசாயம் செய்து வரும் ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி ஆயுள் காப்பீட்டு முகவராகவும் உள்ளார்.
அரண்மனை அருங்காட்சியகத்தில் திவான் பகதூர் பயன்படுத்தி வந்த உடைகள், குறுநில மன்னர்கள் எழுதிய கடிதங்கள், அவர்கள் பயன்படுத்தி வந்த பொருள்கள் இடம்பெற்றுள்ளன.
நன்றி: தினமணி
No comments:
Post a Comment