Monday, 24 August 2015

சேர மறவர் வம்சம்(பழுவேட்டரையர்)

சேர மறவர் வம்சம்(பழுவேட்டரையர்)



"முத்தரையர் வசத்திலிருந்த தஞ்சைக் கோட்டையை முற்றுகையிட்டு முதலில் அந்நகரில் பிரவேசித்தவர் ஒரு பழுவேட்டரையர்.

இரு கால்களும் இழந்த விஜயாலய சோழன் திருப்புறம்பியம் போர்க்களத்தில் புகுந்து அதிபராக்கிரமச் செயல்களைப் புரிந்த போது அவனுக்குத் தோள் கொடுத்துத் தூக்கிச் சென்றவர் ஒரு பழுவேட்டரையர்.

ஆதித்த சோழன் தலையில் கிரீடத்தை வைத்துப் பட்டாபிஷேகம் செய்வித்தவர் ஒரு பழுவேட்டரையர்.

ஆதித்த சோழன் யானைமீது பாய்ந்து வல்லப அபராஜிதவர்மனைக் கொன்ற போது ஆதித்தன் பாய்வதற்கு வசதியாக முதுகும் தோளும் கொடுத்தவர் ஒரு பழுவேட்டரையர்.

பராந்தக சக்கரவர்த்தி நடத்திய பல போர்களில் முன்னணியில் புலிக்கொடியை எடுத்துச் சென்றவர்கள் பழுவேட்டரையர்கள்.

இராஜாதித்யன் போர்க்களத்தில் காயம்பட்டு விழும்போது அவனை ஒரு பழுவேட்டரையர் தம் மடியின் மீது போட்டுக்கொண்டு, "இராஷ்டிரகூடப் படைகள் தோற்று ஓடுகின்றன!" என்ற செய்தியைத் தெரிவித்தார்.

அவ்விதமே அரிஞ்சயருக்கும் சுந்தர சோழருக்கும் வீரத் தொண்டுகள் புரிந்து உதவியவர்கள் பழுவேட்டரையர்கள்தான்."

மேற்கண்ட கூற்றுகள் கல்கியின் கற்பனைகளா அல்லது உண்மையிலேயே நிகழ்ந்தவைகளா? இங்குதான் கல்கியின் திறமை பளிச்சிடுகிறது. 'வரலாற்றையும் கற்பனையையும் எந்த விகிதத்தில் கலந்து அளித்தால் வாசகர்கள் பிரமிப்படைவார்கள்?', 'எந்த விஷயத்தை எப்படி எழுதினால் யோசிக்காமல் ஏற்றுக் கொள்வார்கள்?' என்றெல்லாம் நிச்சயம் தெரிந்து வைத்திருக்கவேண்டும். இல்லாவிடில், ஒரு மனிதனின் முதுகு/தோள் மீதேறிப் பாய்ந்து, யானை மேல் இருப்பவனைக் கொல்லமுடியுமா? என்றெல்லாம் யோசிக்காமல் மந்திரத்துக்குக் கட்டுண்டாற்போல் பொன்னியின் செல்வனைப் படித்து ரசித்திருப்போமா? படித்துப் பல வருடங்கள் ஆனபிறகும் அதன் பாதிப்பு நீங்காமலிருக்குமா?

கதை ஏற்படுத்திய பாதிப்புக்குக் கொஞ்சம் வரலாற்று மருந்து தடவுவோமா?

முதலாம் பராந்தகர் காலத்தில் வெள்ளலூர் என்ற இடத்தில் இராஜசிம்மப் பாண்டியனும் இலங்கை வேந்தனும் இணைந்து சோழர்களை எதிர்த்த போரில் சோழர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கியவராகப் பழுவேட்டரையர் கண்டன் அமுதனைக் கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. இருப்பினும், மேற்கண்ட கூற்றுகள் உண்மையோ என்று எண்ணுமளவுக்கு வீரத்தைப் போற்றியவர்கள் பழுவேட்டரையர்கள் என்று பழுவூரிலிருக்கும் கல்வெட்டுகளின்வழி அறிந்தோம். போரிலோ வீரவிளையாட்டுகளிலோ வீரமரணமடைந்த படைவீரர்களுக்கு விளக்கெரித்துக் கௌரவித்திருக்கிறார்கள். முதலாம் பராந்தகர் காலத்திலிருந்து சுந்தர சோழர் காலம் வரை தொடர்ந்து போர்களில் சளைக்காமல் ஈடுபட வேண்டுமானால், மன்னர் மற்றும் படைத்தலைவர்களின் ஊக்குவிப்பு மிக அவசியம். இந்த விளக்கெரிக்கும் பண்பு வீரர்களின் களம் பல காணும் விழைவுக்கு எண்ணெய் வார்த்தது எனலாம்.

காதலையும் வீரத்தையும் இரு கண்களாகப் போற்றி வாழ்ந்த தமிழர்களின் பலகாலகட்ட வரலாற்றுச்செய்திகள் வெளியுலகுக்கு உணர்த்தப்படாமலே போய்விட்டன. இன்று அனைத்து நாடுகளிலும் இருக்கும் மக்களிடம், 'பழங்காலத்தில் வாழ்ந்த மாபெரும் வீரர்கள் யார்?' என்று கேட்டால், முதலில் வரும் பதில் 'ஜப்பானிய சாமுராய்கள்' என்பதே. அந்த அளவுக்கு வரலாற்றிலும் ஊடகங்களிலும் இவர்களை முன்னிலைப்படுத்தி, தனக்கென்று ஓர் அடையாளம் தேடிக்கொண்டது ஜப்பான். சாமுராய் என்பவன் போர்முனையில் தைரியமாகப் போரிட்டு, தோற்க நேர்ந்தால் தற்கொலை செய்து மடிவது மரபு. ஆனால் மிகுந்த தீரத்துடன் போரிட்டு, தோற்பதாக இருந்தாலும் பகைவன் கையால் நெஞ்சில் வேல்வாங்கி மரணமெய்துவது நம் மறத்தமிழர்கள் மரபு. முதுகில் காயம்பட்டால்கூட வீரத்துக்கு இழுக்கு என்று நெறி வகுத்து வாழ்ந்த நம் தமிழ் வீரர்கள் சாமுராய்களைவிட எந்த விதத்தில் குறைந்தவர்கள்? அவர்களின் வீரச்செயல்கள் கல்லெழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்தாலும், அச்செழுத்துக்களுக்கு அறிமுகப்படுத்தப்படாமை ஏன்? இதைப்பற்றி வேறொரு தருணத்தில் விவாதிப்போம்.

வீரம் மட்டுமா? கலைகளும் திருவிழாக்களும் கூடப் பழுவேட்டரையர்களின் காலத்தில் மக்களின் வாழ்க்கையில் பெரும்பங்கு வகித்தன. சென்ற மாதக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்த இராஜராஜீசுவரத்துக்கும் பகைவிடையீசுவரத்துக்கும் இடையிலான பல்வேறு ஒற்றுமைகளுடன் இன்னொரு ஒற்றுமையும் இருக்கிறது. அதுதான் தளிச்சேரி. தளிச்சேரி என்பது, இறைவனுக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஆடல்நங்கைகள் வாழுமிடம். தஞ்சையைப் போலவே பழுவூரிலும் இரு சிறகுகளுடன் கூடிய ஒரு தளிச்சேரி இருந்திருக்கிறது. இச்செய்தியைக் கேள்விப்பட்டவுடன் நாங்கள் யோசித்த விஷயம் இந்தச் சிறகுகளைப் பற்றித்தான். பெரிய மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் இருக்கும் கட்டடப் பிரிவுகளைக் குறிப்பிட North wing, South wing போன்ற பதங்களைப் பயன்படுத்துவோம். Wing என்பதைச் சிறகு என்ற பொருளிலேயே கல்வெட்டுகள் சுட்டுவது வியப்பையே அளிக்கிறது. இக்கல்வெட்டுகள் செதுக்கப்பட்ட காலத்தில் ஆங்கிலத்துக்கும் தமிழகத்துக்கும் தொடர்பே இல்லை. ஒருவேளை பிற்காலத்தில் இந்தப் பயன்பாடு தமிழிலிருந்துதான் ஆங்கிலத்திற்குப் போனதா என்ற ஐயத்தையும் தோற்றுவிக்கிறது.

பழுவூரிலிருக்கும் மற்ற கோயில்களைவிட அவனிகந்தர்ப்ப ஈசுவரம் சற்று பெரியது. ஒரே வளாகத்துக்குள் 8 ஆலயங்களை உள்ளடக்கியுள்ளது. பல்லவர் காலத்தில் இதுபோன்று ஒரே வளாகத்தில் பல கோயில்களை அமைப்பது தொடங்கி விட்டது. பிற்காலத்தில் இணைக்கப்பட்ட ஆலயங்களைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாவிட்டால், இன்று காணக்கிடைக்கும் இத்தகைய கோயில்கள் பின்வருமாறு :-

1. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் (மகேந்திரவர்ம ஈசுவர கிருகம், கைலாசநாதர் ஆலயம் மற்றும் மதிலையொட்டி இருக்கும் சிறு ஆலயங்கள்)
2. மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் (க்ஷத்திரிய சிம்மேசுவரம், நரபதிசிம்ம விஷ்ணுகிருகம், இராஜசிம்மேசுவரம்)
3. கொடும்பாளூர் மூவர் கோயில்
4. திருவையாறு (பஞ்சநதீசுவரர் கோயில், வட கைலாயம், தென் கைலாயம்)
5. கங்கைகொண்ட சோழபுரம் (கங்கைகொண்ட சோழீசுவரம், வட கைலாயம், தென் கைலாயம்).



அவனிகந்தர்ப்ப ஈசுவரத்தைச் சற்று நுணுகிக் கவனித்தபோது பல விஷயங்கள் எங்கள் கவனத்தை ஈர்த்தன. வாழ்க்கையிலேயே முதல்முறையாகக் (நான்கு வருடங்களுக்கே இப்படியா?) கல்வெட்டுகளில் புள்ளி வைத்த எழுத்துக்களைக் கண்டோம். இது மட்டுமல்ல. பழுவேட்டரையர்கள் பழுவூரை ஆள ஆரம்பித்தது முதலாம் ஆதித்தரின் ஆட்சிக்காலத்தில் என்று இங்கிருக்கும் ஆதித்தரின் கல்வெட்டுகள் வழி அறியலாம். பழுவூர் மட்டுமல்லாது, சோழதேசத்தின் பிற பகுதிகளிலும் இருக்கும் கல்வெட்டுகளின் வழி, பழுவேட்டரையர்களின் வம்சாவளியையே வடித்தெடுத்து விடலாம். பின்வரும் செய்திகளைத் தொகுத்துப் பாருங்கள்!


எண்கல்வெட்டு இருக்குமிடம்கோயில் பெயர்சோழமன்னர்ஆட்சியாண்டுபழுவேட்டரையர்செய்திஆண்டறிக்கை எண்
1திருவையாறுபஞ்சநதீசுவரர் கோயில்முதலாம் ஆதித்தர்10குமரன் கண்டன்நிவந்தமாக அளிக்கப்பட்ட நிலத்தின் கிழக்கு மற்றும் வடக்கெல்லைகளில் இருந்த நிலம் குமரன் கண்டனுடையதுSII Volume 5, No. 523
2மேலப்பழுவூர்அவனிகந்தர்ப்ப ஈசுவரம்முதலாம் ஆதித்தர்12குமரன் கண்டன்'குமரன் கண்டன் பிரசாதத்தினால்' என்ற சிறப்புடன் குறிப்பிடப்படுகிறார்SII Volume 3, No. 235
3திருவையாறுபஞ்சநதீசுவரர் கோயில்முதலாம் ஆதித்தர்19குமரன் மறவன்இவர் நம்பி மறவனார் என்று குறிப்பிடப்படுவதால், இளவரசராக இருந்தார் என்று கொள்ளலாம்SII Volume 5, No. 537
4மேலப்பழுவூர்அவனிகந்தர்ப்ப ஈசுவரம்முதலாம் ஆதித்தர்22குமரன் மறவன்இதிலும் 'குமரன் மறவன் பிரசாதத்தினால்' என்று குறிப்பிடப்படுகிறார்SII Volume 8, No. 298, ARE 355 of 1924
5லால்குடிசப்தரிஷீசுவரர் கோயில்முதலாம் பராந்தகர்5குமரன் மறவன்'அடிகள் பழுவேட்டரையர் குமரன் மறவன்' என்று பெருமைப்படுத்துகிறதுSII Volume 19, No. 146
6திருப்பழனம்மகாதேவர் கோயில்முதலாம் பராந்தகர்6குமரன் மறவன்குமரன் மறவனோடு தீப்பாஞ்ச அழகியான் பற்றிய தகவலைத் தருவதன் மூலம் குமரன் மறவனின் காலம் முடிந்துவிட்டதைக் குறிப்பிடுகிறதுSII Volume 19, No. 172
7கீழப்பழுவூர்திருவாலந்துறையார் கோயில்முதலாம் பராந்தகர்12கண்டன் அமுதன்வெள்ளலூர்ப் போரில் பராந்தகருக்காகப் போரிட்டு வெற்றி பெற்ற செய்திARE 231 of 1926
8திருவையாறுபஞ்சநதீசுவரர் கோயில்முதலாம் பராந்தகர்14கண்டன் அமுதன்இது 'வெள்ளலூர்ப் போரில் கண்டன் அமுதன் இறந்தார்' என்ற அறிஞர்களின் கருத்தை மறுக்கிறதுSII Volume 5, No. 551
9மேலப்பழுவூர்அவனிகந்தர்ப்ப ஈசுவரம்சுந்தரசோழர்5மறவன் கண்டன்இவரது கொடை, ஆட்சிமுறை, வரியமைப்பு பற்றிப் பேசுகிறதுSII volume 5, No. 679
10கீழப்பழுவூர்திருவாலந்துறையார் கோயில்உத்தமச்சோழர்9மறவன் கண்டன்இவரது மறைவைத் தெரிவிக்கிறதுSII Volume 19, No. 237, 238
11உடையார்குடிஅனந்தீசுவரர் கோயில்உத்தமச்சோழர்12கண்டன் சத்ருபயங்கரன்இவர் மறைவுக்காக இவர் தமையன் கண்டன் சுந்தரசோழன் இக்கோயிலில் ஐந்து அந்தணர்களை உண்பிக்கவும் நந்தா விளக்கெரிக்கவும் கொடையளித்தான்SII Volume 19, No. 305
12கீழப்பழுவூர்திருவாலந்துறையார் கோயில்உத்தமச்சோழர்13கண்டன் சுந்தரசோழன்இக்கோயிலில் ஆடவல்லான் திருமேனியை ஊசலாட்ட வாய்ப்பாக ஒரு மண்டபம் அமைத்துக் கொடுத்தார். கல்வெட்டுகளின்வழி 'ஆடல்வல்லான்' என்ற பெயரை முதன்முதலாக வரலாற்றுக்கு அறிமுகப்படுத்தியவர்SII Volume 5, No. 681
13மேலப்பழுவூர்அவனிகந்தர்ப்ப ஈசுவரம்உத்தமச்சோழர்15கண்டன் மறவன்நிவந்தம் அளித்ததுSII Volume 8, No. 201
14மேலப்பழுவூர்அவனிகந்தர்ப்ப ஈசுவரம்முதலாம் இராஜராஜர்3கண்டன் மறவன்கொடும்பாளூரையாண்ட இருக்குவேளிர் குலத்திற்கும் பழுவேட்டரையர் குலத்திற்கும் ஏற்பட்ட மண உறவைத் தெரிவிக்கிறதுSII Volume 5, No. 671
15மேலப்பழுவூர்அவனிகந்தர்ப்ப ஈசுவரம்முதலாம் இராஜராஜர்15கண்டன் மறவன்இவரைப்பற்றிக் குறிப்பிடும் கடைசிக் கல்வெட்டு இதுவேARE 363 of 1924
16கீழப்பழுவூர்திருவாலந்துறையார் கோயில்முதலாம் இராஜேந்திரர்8யாருமில்லைபழுவேட்டரையரின் பணிப்பெண் வீராணன் ஒற்றியூர் இக்கோயிலுக்களித்த கொடையைக் கூறுகிறதுSII Volume 5, No. 665


இந்தப் பதினாறு கல்வெட்டுகளையும் காலவரிசைப்படி பொருளறிந்து நன்கு நிறுவப்பட்ட சோழமன்னர்களின் ஆட்சியாண்டுகளுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தோமானால், கி.பி 881 முதல் கி.பி 1020 வரை பழுவூரை ஆண்ட மன்னர்களைக் கீழ்க்கண்டவாறு வரிசைப் படுத்தலாம்.

1. குமரன் கண்டன்
2. குமரன் மறவன்
3. கண்டன் அமுதன்
4. மறவன் கண்டன்
5. கண்டன் சத்ருபயங்கரன்
6. கண்டன் சுந்தரசோழன்
7. கண்டன் மறவன்


இதுதான்
கல்வெட்டுகளிலிருந்து வரலாற்றுச் செய்திகளை வடித்தெடுக்கும் முறை. கல்வெட்டுகளில் இருப்பவை பெரும்பாலும் நிவந்தங்கள் கொடையளித்த செய்திகள்தான். ஆனால் அவற்றினுள் ஒளிந்திருக்கும் செய்திகளை Reading through the lines என்று ஆராய்ச்சிக் கண்கொண்டு நோக்கினால், வரலாறு வெளிப்படும். ஒரு மின்விளக்கைக் கொடையளித்துவிட்டு, அதிலிருந்து வரும் வெளிச்சத்தை மறைக்குமளவுக்குத் தன் பெயரை எழுதிவைத்து விடும் இக்காலத்து வழக்கத்துடன் கல்வெட்டுகளை ஒப்பிட்டுப் புறந்தள்ளாமல், அவை எப்பேற்பட்ட அட்சயப் பாத்திரங்கள் என்று உணரத் தலைப்படுவோமே!

கண்டன் சத்ருபயங்கரன், கண்டன் சுந்தரசோழன், கண்டன் மறவன் ஆகிய மூவரும் உடன் பிறந்தவர்கள் என்ற செய்தி உடையார்குடி அனந்தீசுவரர் கோயில் கல்வெட்டின் மூலம் தெளிவாகின்றது. எனவே, இவர்கள் மூவரின் பெயர்களிலும் உள்ள கண்டன் என்பது மறவன் கண்டனின் பெயர் என்று புரிந்து கொள்ளலாம். இதே அடிப்படையில் பார்த்தால், இந்த 7 பேர்களுக்குள் உள்ள உறவு முறையைக் கீழ்க்கண்டவாறு பகுக்கலாம்.



"முதலாம் இராஜேந்திரரின் எட்டாம் ஆட்சியாண்டில் பழுவூரை ஆண்டுகொண்டிருந்த பழுவேட்டரையர் யாரென்பது உறுதியாகத் தெரியவில்லை. வேறு சான்றுகள் ஏதுமற்ற நிலையில் இவரைக் கண்டன் மறவனாகவே கொள்ளலாம். உத்தமச்சோழரின் பதினைந்தாம் ஆட்சியாண்டில் பழுவூர் மன்னராக ஆட்சிப் பொறுப்பினை ஏற்று, முதலாம் இராஜராஜர் காலத்தில் மன்னுபெரும் பழுவூரில் திருத்தோற்றமுடையார் கோயிலைச் செங்கல் திருப்பணியாய் எடுப்பித்து, முதலாம் இராஜேந்திரரின் எட்டாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுடன் வரலாற்று நீரோட்டத்திலிருந்து மறையும் கண்டன் மறவனுடன் பழுவேட்டரையர் மரபும் ஒரு முடிவுக்கு வருகிறது. முதலாம் ஆதித்தரின் பத்தாம் ஆட்சியாண்டில் பழுவூர் அரசராகப் பழுவேட்டரையர் குமரன் கண்டனோடு தொடங்கும் பழுவேட்டரையர் ஆட்சி முதலாம் இராஜேந்திரரின் எட்டாம் ஆட்சியாண்டில் பழுவேட்டரையர் கண்டன் மறவனை இறுதி மன்னராய்க் காட்டி முற்றுப் பெறுவதாகக் கருதலாம்." என்று பழுவூர் - அரசர்கள், கோயில்கள், சமுதாயம் என்ற தனது நூலில் முனைவர் இரா.கலைக்கோவன் உரைக்கிறார்.

மறவன் கண்டன் சுந்தரசோழரின் ஆட்சிக்காலத்தில் பழுவூரை ஆண்டவர். இவரது மூன்று பிள்ளைகளில் கண்டன் மறவன் சுந்தரசோழருக்குப் பிறகு சுமார் 40 ஆண்டுகள் பழுவூரை ஆண்டார். எனவே, அப்போது கண்டன் மறவன் சிறுபிள்ளையாயிருக்க, மூத்த சகோதரர்கள் கண்டன் சத்ருபயங்கரனும் கண்டன் சுந்தரசோழனுமே சுந்தரசோழர் காலத்தில் வாழ்ந்தவர்கள். இப்போது புரிகிறதா? கல்கி 'பெரிய பழுவேட்டரையரையும்', 'சின்னப் பழுவேட்டரையரையும்' எங்கிருந்து எடுத்தார் என்று?

இத்தனை சிறப்புகள் வாய்ந்த பழுவூரைக் காண வாசகர்கள் விரும்பினால், திருச்சிராப்பள்ளியிலிருந்து ஜெயங்கொண்டம் செல்லும் சாலையில் 55வது கிலோமீட்டரில் தஞ்சாவூர்/திருவையாறு செல்லும் சாலை பிரியுமிடத்தில் அமைந்துள்ள பகைவிடையீசுவரம், அவனிகந்தர்ப்ப ஈசுவரம், திருவாலந்துறையார் கோயில் மற்றும் மறவனீசுவரம் ஆகிய கோயில்களுக்குச் சென்று வீரவரலாற்றைத் தரிசிக்கலாம். பழுவூர்க் கோயில்களின் சிற்பக்கலை, கட்டடக்கலை மற்றும் கல்வெட்டுகளை முழுமையாகப் புரிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்கு ஒரு பரிந்துரை. செல்லும்போது முடிந்தால் முனைவர் கலைக்கோவன் எழுதிய பழுவூர் - அரசர்கள், கோயில்கள், சமுதாயம் என்ற நூலை எடுத்துச் செல்லவும். கோயில்களின் மீதான உங்களின் பார்வை முற்றிலுமாக மாறி, சரித்திர ஆர்வ வியாதி முற்றுவதைக் கண்கூடாகக் காணலாம்.

No comments:

Post a Comment