Friday, 21 August 2015

சிங்கம்பட்டி ஜமீன்-தூக்குத்துரை



சிங்கம்பட்டி ஜமீன்-தூக்குத்துரை


வித்தியாசமானது அந்த ஜமீன். வெறுமனே சுகபோகங்களிலேயே மற்ற ஜமீன்களைப் போல மூழ்கிக் கிடக்கவில்லை.‘தன்னை நம்பியவர்களைத் தனது தலையைக் கொடுத்தாவது காப்பாற்றியாக வேண்டும்’ என்பதில் அவ்வளவு தீவிரம்!அந்த நம்பிக்கைக்கேற்றபடியே வாழ்ந்தும் காட்டியிருக்கிறது ‘சிங்கம்பட்டி ஜமீன்.’பெரியசாமித் தேவர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிங்கம்பட்டியின் 24-வது தலை முறையின் ஜமீன்தார். அவருடைய நண்பர் ராமசாமித் தேவர். அந்தச் சமயத்தில் அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சொல்லி மதுரை சிறையில் அடைத்திருந்தார்கள். தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டாகி விட்டது.
தர்மசங்கடமான நிலையில் நண்பரான சிங்கம்பட்டி ஜமீன்தாருக்குச் சிறையிலிருந்தபடியே கடிதம் எழுதியிருந்தார்.நம்பி எழுதியிருக்கிற நண்பரைக் கைவிட முடியுமா? நேரே மதுரைக்குப் போனார் ஜமீன்.
ஜெயிலுக்குள் எப்படி நுழைவது? மதுரை ஜெயிலரைப் பழக்கம் பிடித்தார். அவர் மூலம் ஜெயிலுக்குள் போனார். கைதிகளுக்கு உதவினார். அங்கே சந்தடி சாக்கில் தனது நண்பர் ராமசாமித் தேவரையும் பார்த்தார். நம்பிக்கையூட்டினார்.ஜெயிலரைப் பலவழிகளில் வசப்படுத்தி எப்படியாவது ராமசாமித் தேவரை வெளியே கொண்டு போய்விட முயற்சி பண்ணினார்.

ஜமீன்தாரின் நோக்கம் தெரிந்ததும் கோபமாகி விட்டார் ஜெயிலர். பார்த்தார் ஜமீன். ஒரே போடு. சாய்ந்து விட்டார் ஜெயிலர்.அவருடைய உடம்பைக் கொண்டு போய்ப் பத்திரமாக ஆற்று மணலில் புதைத்தார். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஜெயிலரின் நண்பராகவே ஜெயிலுக்குள் போய் ராமசாமித் தேவரை தனியே பேச அழைத்துக் கடத்திக் கொண்டு வந்து
விடுகிறார்.நேரே இருவரும் சிங்கம்பட்டி ஜமீனுக்குப் போய் விடுகிறார்கள்.
‘இவ்வளவு கஷ்டப்பட்டுத் தன்னைக் காப்பாற்றியிருக்கிறாரே’ என்று பெருமிதம் தாளவில்லை ராமசாமித் தேவருக்கு.அந்தச் சந்தோஷமெல்லாம் சில நாட்களுக்குத்தான். ஆற்று மணலில் புதைக்கப்பட்டிருந்த ஜெயிலரின் சடலம் வெளியே தெரியவர, அடையாளம் காட்டிவிட்டது அங்கிருந்த குதிரையின் சேனத்தில் இருந்த ஜமீன் அடையாள முத்திரை.
சிங்கம்பட்டி ஜமீன்தான் கொலை செய்திருக்கிறார் என்று ஆதாரங்கள்
தெளிவானதும் கைதாகிறார். வழக்கு விசாரணை. பிறகு ஜமீனுக்குத் தூக்குத் தண்டனை – அதிலும் பொது இடத்தில்.‘ஜமீன்தாரைத் தூக்கில் போடுகிறார்கள்’ என்று ஒரே பேச்சு. எதிரே தூக்குமரம். அதில் சுருக்குக் கயிறு. சுற்றிலும் தன்னுடைய ஆளுகைக்குட்பட்ட
மக்கள்.கூட்டத்தை விலக்கிவிட்டு, தூக்குமரத்தை நெருங்கினார் ஜமீன். கழுத்தில் சுருக்கு விழுகிறது. பகல் நேரத்தில் யாரிடமும் கெஞ்சிக் கதறாமல் கம்பீரத்துடனேயே உயிர் பிரிகிறது.117 வருஷங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது.திருமணம் செய்து கொள்ளாமலேயே வைராக்கியமும், வீர உணர்வும், நட்பை மதிக்கிற குணமும் கொண்டிருந்த ஜமீன்தார் இப்போது சிலையாக அதே இறுக்கத்துடன் கும்பிட்டபடி நிற்கிறார்.
சிங்கம்பட்டியிலுள்ள சுப்பிரமணியசாமி கோயிலிலேயே ஒரு பக்கத்தில் ஜமீனின் சிலை. ‘தூக்குத்துரை’ என்றே சொல்கிறார்கள் சிங்கம்பட்டி மக்கள். இப்போதும் அவரை வழிபடுகிறார்கள்.ஜமீனிலேயே அடுத்து எட்டு தலைமுறைகள் கடந்துவிட்டன. இப்போது சிங்கம்பட்டி ஜமீனாக இருக்கிறார் முருகதாஸ் தீர்த்தபதி. தூக்குத்துரை தூக்கிலிடப்பட்ட இடத்தை இன்னும் நினைவுடன் கொண்டாடுகிறார்கள் ஊர் மக்கள்.

No comments:

Post a Comment